WORD OF GOD

WORD OF GOD

Sunday, February 13, 2011

நேர்க்கொண்ட பார்வை

தியானப் பகுதி உபாகமம். 30 :15 -20 ௦


அன்பான உடன் விசுவாசிகளே, புதியதாக ஒரு பொருள் வாங்கினால் அந்தப்பொருள், நமக்குள் பல மாற்றங்களை கொண்டுவரும், உதாரணமாக, ஆண்கள் புதிதாக ஒரு இரு சக்கர வாகனம் வாங்கினால் அதை எடுத்து ஓட்டுவதற்கு முன்னால், நன்றாக தன்னை அலங்கரித்துக்கொண்டு, அதிலே பயணிக்க ஒரு புதிய கண்ணாடி வாங்கி,  பல முறை வீதிகளில் வலம் வருவோம் நண்பர்களுக்கு, காண்பித்து ஒரு இனம்புரியாத  மகிழ்ச்சியோடு நம்மையறியாமல் சிரித்துக்கொண்டே ஒட்டிக்கொண்டிருப்போம்.

பெண்கள் ஒரு புதிய விலையுயர்ந்த புடவை வாங்கினால், முகமெல்லாம் மலர்ந்து, அதற்கு மேட்சாக, வளையல், கம்மல், கிளிப், காலனி, என உச்சந்த்தலை முதல் உள்ளங்கால் வரை அந்த புடவையை அழகாக காட்ட அனேக மாற்றங்களை செய்கிறோம். ஒரு புதிய பொருள் வாங்கினாலே நமக்குள் இவ்வளவு மாற்றங்கள் நிகழும் என்றால், ஒரு புதிய விலையேற பெற்ற, மகத்துவமுள்ள வாழ்க்கை கிடைத்தால் அது நமக்குள் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

நம்முடைய தியான பகுதி இஸ்ரவேல் மக்களுக்கு கிடைக்கப்போகிற புதிய மிகப்பெரிய மகிமையின் வாழ்வை பற்றியும் அந்த வாழ்வு எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்பதை  பற்றியும்  பேசுகிறது.

29 ம் அதிகாரத்திலிருந்து இஸ்ரவேல் மக்களுக்கு அனேக அறிவுரைகளை உபதேசித்து 30 ம் அதிகாரம் 15 முதல் 20 வரை உள்ள வசனங்களில்  ஒரு முடிவுரையை தருகிறார், இது ஒட்டு மொத்த உபாகமம் புத்தகத்தின் முடிவுரை என்றும் கூறலாம், இதில் மோசே கூறுகிற செய்தி என்னவென்றால் எகிப்தில், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி கானானுக்கு போகிற இஸ்ரவேலர்களுக்கு கடவுள் பூரண சுதந்திரம் கொடுக்கிறார் .

அதாவது கானானுக்கு போகிற மக்களுக்கு, நன்மையையும்,  தீமையையும்  முன்வைக்கிறேன் என்கிறார் இதில் எதை தீர்மானிக்கவும், அதாவது எதை பின்பற்றவும் உரிமை தருகிறார், நன்மை  என்பது அவருடைய வார்த்தையின் படி வாழ்வது, தீமை  என்பது அதற்கு அப்படியே எதிர்மறையானது, அதாவது, அவருடைய வார்த்தையின் படி வாழாமல் சுய இச்சைகளின் படி, வாழ்வது.

நன்மையை  பின்பற்றினால் ஜீவனும், தீமையை  பின்பற்றினால், சாவும் நிச்சயம் என்கிறார்.எனவே புதிய தேசத்தில் சுதந்திரமாக வாழப்போகிற ஜனத்திற்கு எப்படியும் வாழ கடவுள் முழு சுதந்திரம் தருகிறார், அதே நேரத்தில் கடவுளுடைய பிள்ளைகள் என்கிற தகுதி வேண்டுமானால், வாழ்வு தரும் அவருடைய வார்த்தைகளை  பின்பற்ற வேண்டியது  அவசியம் என்பதை மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றார்.

அவருடைய வார்த்தைகளை எப்படி பின்பற்றுவது, வேதாகமம் முழுதும்  உள்ள அத்தனை வார்த்தைகளும் இறைவனுடைய வார்த்தைகள் தான் இதில் எதை பின்பற்றுவது?

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, மிக எளிமையாக, மிக தெளிவாக கடவுளுடைய வார்த்தை படி வாழ்வது எப்படி என்று கூறுகிறார், மத்தேயு.5 :37  ல் ஆம் என்பதை ஆம் என்றும் இல்லை என்பதை இல்லை எனவும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சின எல்லாமே தீமை என்கிறார் இதை விட தெளிவாக  யாருமே சொல்லமுடியாது.

அப்படியானால் கடவுளுடைய வார்த்தைகளின் படி வாழ்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் வாழ்வில் மாய்மாலம் இருக்காது, மனதில் பட்டதை, நியாயமாய்   தோன்றுவதை தைரியமாய் சொல்லுவார்கள். அப்படி சொல்லுகிறவர்களே வாழ்வின் பாதையாகிய நன்மையின் பாதையில் நடப்பவர்கள்.

ஆனால் பல நேரங்களில் நாம் மனதில் பட்டதை கண்களுக்கு முன்பாக நடக்கிற தவறுகளை தவறு என்று தெரிந்தாலும், சொல்ல தயங்குகிறோம், நன்மை செய்வோரை பாராட்டவும் நீங்கள் செய்தது சரி என்று சொல்லவும் தயங்குகிறோம். ஆனால் இயேசுகிறிஸ்துவை நம்புகிற நாம் அதற்கு ஆயத்தப்படவேண்டியது அவசியம்.

எதையும் இயேசுவை போல நேர்க்கொண்ட பார்வையோடு காணுதலே நன்மையின் பாதையில் நடப்பது. எனவே நாமும் அவரைப்போல யாருக்கும் பயப்படாமல் ஆம் என்பதை ஆம் என்றும் இல்லை என்பதை இல்லை என்றும் கூறி அவர் நாம மகிமைக்காய் வாழ்வோம் அதுவே கிறிஸ்துவில் புது ஜீவனை பெற்றுக்கொண்ட நமது அடையாளம்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews