WORD OF GOD

WORD OF GOD

Thursday, February 10, 2011

காலை மன்னா



அன்பான உடன் விசுவாசிகளுக்கு காலை ஸ்தோத்திரங்கள்.
இந்த காலை வேளையில் தியானத்திற்கென்று  நாம் தெரிந்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை 2கொரிந்தியர் .4:8-10



8. நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;

9. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.

10. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
பவுலின் வார்த்தைகள் விசுவாசத்தின் ஆழத்தை வெளிப்படுத்தக்  கூடியவைகள். இந்த வார்த்தைகளிலும் இயேசுவை நம்புகிறதினால் உண்டாகிற மகத்துவமான வாழ்வை பற்றி பேசுகிறார்.

நெருக்கம், கலக்கம், துன்பம், வீழ்ச்சி இவைகளில்  ஒன்றும் இயேசுகிறிஸ்துவை நம்புகிறவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். காரணம், நெருக்கம், கலக்கம், துன்பம், வீழ்ச்சி இவை அனைத்தையும் அனுபவித்தவர் பவுலடிகளார். அதாவது

 அவர் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு விசுவாச வாழ்விற்குள் வந்தவுடன் இயேசுவின் சீடர்களை தான் முதலில் சந்தித்தார் ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை,

முதன் முதலில் ஊழியத்தை தன் சொந்த ஜனங்கள் மத்தியில் துவங்கினார் அவர்களோ இவரை கல்லெறிந்து துரத்தினர்.

ஆற்றல் மிக்க ஊழியனாக இருந்த காலக்கட்டத்தில், மிகக்கொடுமையான சிறை தண்டனைகளை அனுபவித்தவர். அவர் அனுபவித்த தண்டனைகள் அநேகம் அவை எவ்வளவு கொடுமையானவை என்பதை புரிந்து கொள்ள இரண்டு உதாரணங்கள். பசியோடும், நிர்வாணமாயும் இருந்தவர்.

கடைசி காலத்தை கூட சிறையில் கழித்தவர். அங்கேயும் சுவிசேஷத்தை அறிவித்தவர்.

இது எப்படி சாத்தியம்? நெருக்கம் துன்பம், கலக்கம், வீழ்ச்சி இவைகளின் மத்தியில் எப்படி ஒரு மனிதன் இவ்வளவு பெரிய வாழ்க்கை வாழ முடிந்தது?

நம்மால் ஒரு சிறிய ஏமாற்றத்தை  கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை, தோல்வி வந்தால் வாழ்வே முடிந்து விட்டது என்று நினைக்கிறோம். மனதளவில் நொந்துப்போனவர்களாய் புலம்ப ஆரம்பித்து கடவுளை கேள்வி மேல் கேள்வி கேட்கிறோம், ஆனால் இந்த மனிதன் இவ்வளவு துன்ப துயரங்களின் மத்தியில்  எப்படி வாழ்ந்தார்?  எப்படி உயர்ந்தார்? அந்த ரகசியம் தெரிந்தால் நாமும் நம்மை துயரங்களின் நடுவே காத்து கொள்ளலாமே.

அந்த மகாப்பெரிய ரகசியம் என்ன என்பதையும் 10௦ ம் வசனத்தில் மிகத்தெளிவாக கூறுகிறார், அது யாதெனில் கிறிஸ்துவின் ஜீவன் எங்கள் சரீரத்தில் இருக்கிறது என்கிறார்.

ஓ ஆமல்லவா???????/// எவ்வளவு பெரிய சத்தியம், நம்முடைய இந்த தாழ்வான சரீரத்தில் வாசமாயிருப்பது முழு உலகின் இரட்சகரும், மரணத்தையே வென்றவருமான இயேசுவின் ஜீவனல்லவா?

அப்படியானால் நெருக்கங்களோ, கலக்கங்களோ, துன்பங்களோ, தோல்விகளோ நம்மை என்ன செய்துவிடும்?  மரணம் கூட நம்முன் தோற்று ஓடிப்போகுமல்லவா?

ஏன் பயம்? ஏன் கலக்கம்? ஏன் தயக்கம்? ஏன் சந்தேகம்? நாமல்ல நமக்குள் வாசமாயிருக்கிற கிறிஸ்து நம்மை நடத்துவார், ஜெயமாய் நடப்போம். ஜெயித்து காட்டுவோம். இந்தக் காலை நமக்கு வெற்றி  மாலையாகும் ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews