WORD OF GOD

WORD OF GOD

Thursday, February 17, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் காலை நேர ஸ்தோத்திரங்கள். இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட வசனம், மத்தேயு .10:29 -31 

29. ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.

30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.

31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்



அன்பானவர்களே, நம்முடைய வாழ்வில் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள், நாம் அதிகமாய் நேசிக்கிறவர்களெல்லாம்  நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம், அவர்களுக்கு துன்பங்கள் நேருமாயின் அதை நாம் சகித்திக்கொள்ள முடியாது, நமக்கு நேர்ந்த துன்பத்தை போல நாம் பதறுவோம் காரணம் அவர்கள் நமக்கு விசேஷமானவர்கள். உதாரணமாக தாய்க்கோ, தந்தைக்கோ, பிள்ளைகளுக்கோ,  நம்முடைய நமக்கு மிகவும் அருமையான நண்பர்களுக்கோ, நம்முடைய பாசத்திற்குரிய உறவுகளுக்கோ துன்பம் நேருமாயின் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

நம்முடைய தியான பகுதியில், நம்முடைய ஆண்டவருக்கு விசேஷமானவர்களை பற்றி நாம் பார்க்கிறோம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடவுளுக்கு விசேஷமானவர்கள் யார் என்பதை பற்றி பேசுகிறார், அடைக்கலான் குருவிகளோடு ஒப்பிட்டு இதை விளக்குகிறார்.

அந்தக் கால கட்டத்தில் தேவாலயத்தில் பலியிடுகிற பழக்கம் இருந்தது, பலி செலுத்துவதற்கு ஆடு, மாடுகளையோ, புறாக்களையோ பயன் படுத்துவார்கள் ஆனால் ஏழைகளால் அதை வாங்க முடியாது, எனவே ஏழைகள் பலியிடுவதற்காக வாங்குகிற ஒரே ஒரு உயிர், அடைக்கலான் குருவி மட்டுமே காரணம் அது மட்டுமே மிகவும் விலை குறைவாக கிடைக்க கூடியது, ஒரு காசுக்கு, நம்முடைய பணத்தில் ஒரு ரூபாய்க்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை வாங்கிவிடலாம்,

அவ்வளவு விலை மலிவான, குருவிகளில் ஒன்றும்  பிதாவின் சித்தம் இல்லாமல் தரையில் விழாது என்று ஆண்டவர் கூறுகிறார், அதாவது அந்த சாதாரண குருவிகளை கூட மிகவும் கண்ணும் கருத்துமாக கடவுள் பார்த்துக்கொள்ளுகிறார், என்பதை விளக்குகிறார்.

அதுமட்டுமல்ல, நம்முடைய தலை முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது என்றும், பயப்படாதீர்கள், அடைக்கலான் குருவிகளை பார்க்கிலும் நீங்கள் விசெஷித்தவர்களல்லவா என்கிறார். அதாவது அவருடைய பிள்ளைகளாகிய நாம் அவருக்கு எவ்வளவு விசேஷமானவர்கள் என்பதை இதன் மூலம் நிரூபிக்கிறார். ஒவ்வொரு அடைக்கலான் குருவியையும் பாதுகாக்கிறவர், நம்மை முழுவதுமாக பாதுகாக்கிறார், என்பதை விளக்குகிறார்.

நம் தலை முடிகளெல்லாம் எண்ணி வைத்திருக்கிறார் என்றால் , அவர் அனுமதியின்றி அவைகளில் ஒன்றும் விழாது, எனவே நம்  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம்மை ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிறார், காரணம் நாம் அவருக்கு விசேஷமானவர்கள்,

எனவே நாம் கடவுளுக்கு விசேஷமானவர்கள் என்கிற தைரியத்தோடு வாழ்ந்து அவர் நாமத்தை மிகிமைப்படுத்துவோம், அவர் நம் வழிகளிலெல்லாம், நம்மை  பாதுகாத்து வழி நடத்துவார். இந்த காலை இந்த தைரியத்தோடு துவங்கி வாழ பரிசுத்தாவியானவர் தாமே நம்மை வழிநடத்தி பாதுகாப்பாராக, ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews