WORD OF GOD

WORD OF GOD

Monday, February 21, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளுக்கு காலை ஸ்தோத்திரங்கள்

இன்றைய  தியான வசனம். 1  யோவான்.5 :4 -5 .

4. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

5. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?


கடந்த சனிக்கிழமை (19 .02 .2011  ) முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கி நடந்து வருகிறது, முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி பங்களாதேஷ் அணியை வென்றது, தொடர்ந்து இதே போன்ற வெற்றிகளை இந்திய அணி குவிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

பொதுவாக வெற்றி என்பது எல்லா மனிதனும் விரும்புகிற வார்த்தை, தோல்வியை யாருமே விரும்புவதில்லை. விளையாட்டு போட்டிகளில் மட்டுமல்ல, கல்வியில், வேலையில், வாழ்க்கையில் வற்றிக்கு கிடைக்கிற மரியாதையே தனி, எனவே எல்லா மனிதருக்கும் வெற்றியின் மீது ஒரு மயக்கமே ஏற்படுகிறது.

நம்முடைய தியானப்பகுதி சந்தோஷத்தை தரக்கூடிய வெற்றி யாருக்கு சொந்தமாகும் என்பதை விளக்குகிறது. இயேசுவானவர்  கடவுளின் குமாரன் என்று விசுவாசிக்கிறவனேயன்றி  உலகத்தை ஜெயிக்கிறவன் யார் என்று யோவான் கேள்வி எழுப்புகிறார்.

அப்படியானால் வெற்றி யாருக்கு சொந்தம் என்பதை இந்த திரு வசனங்கள் மூலம் நமக்கு தெளிவாக புரிகிறதல்லவா?

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில், அவர் எல்லா அக்கிரமங்களையும், அநியாயங்களையும் எதிர்த்து நின்றார், அதன் பலன் அநியாயம் செய்பவர்களெல்லாம் ஒன்றிணைந்து, அவரை சிலுவையில் அறைந்தனர், மேலும் அவ்வளவுதான் இயேசு தோற்றுப்போனார், இனி நாம் நம் தவறுகளை தைரியமாய் செய்யலாம் என நினைத்தனர், ஆனால் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து வந்து, இந்த உலகத்தையும் மரணத்தையும் ஜெயித்து, உண்மையான் வெற்றி வீரராக அநியாயம் செய்தோரை அதிரச்  செய்தார்.

அது மாத்திரமல்ல அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் இந்த வெற்றியின் உத்தரவாதத்தை கொடுத்திருக்கிறார். அதாவது தன்னை பின்பற்றுகிறவர்களை பார்த்து நீங்கள் என்னிலும் வல்ல காரியங்களை செய்வீர்கள் என்று வாக்களித்திருக்கிறார்.

எனவே வெற்றி என்பது யாருக்கோ சொந்தமானதல்ல  கிறிஸ்துவை விசுவாசிக்கிற நம் ஒவ்வொருவர்க்கும் சொந்தமானது என்ற விசுவாசத்தோடு இந்த நாளை  துவங்கி ஜெயமாய் வாழ பரிசுத்தாவியானவர் நமக்கு துணை செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews