WORD OF GOD

WORD OF GOD

Monday, February 7, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் காலை நேர ஸ்தோத்திரங்கள் இந்த காலையில் நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை, ஏசாயா.41 :10
நீ பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்;திகையாதே. நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்


 மனித வாழ்க்கை சரீரமும், மனமும் சேர்ந்தது, நாம் சந்தோஷமாக வாழ சரீரம் மட்டும் அல்ல மனமும்  ஆரோக்யமாக  இருக்க வேண்டும். பல நேரங்களில் சரீரத்தில் ஏற்படுகிற பாதிப்புகள் மிக விரைவாக குணமாகி விடுகிறது, ஆனால் மனதில் ஏற்படுகிற பாதிப்புகள், அவ்வளவு சீக்கிரம் குணமாகிறதில்லை. 

நம்முடைய தியான பகுதியிலும் கூட இஸ்ரவேல் மக்களுக்கு மனதளவில் ஒரு பெரிய பாதிப்பு உண்டாயிருந்ததை  அறிய முடிகிறது. காரணம் என்னவென்றால் இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய சிறையிருப்பில் வாழ்ந்த காலக்கட்டம். பாபிலோனியர் பெரும் படையாக வந்து இஸ்ரவேல் தேசத்தையும், எருசலேமையும் முற்றிலுமாக சீரழித்து இஸ்ரவேலர்களை அடிமைகளாக பாபிலோணிற்கு  கொண்டுவந்தனர்.

இந்த மிகப்பெரிய தோல்வி இஸ்ரவேலர்களை நிலைகுலைய வைத்தது. மனதளவில் மிகவும் துவண்டுப் போனார்கள் இனி நம்மால் இழந்த வெற்றியை திரும்ப பெற முடியும் என்கிற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க துவங்கினர், தோல்வி பயம் அவர்களை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டது. காரணம் தங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லை என்பதும், நம்முடைய பலம் அவ்வளவுதான், நாம் ஒன்றும் செய்ய முடியாது என்கிற தாழ்வு மனப்பான்மையும் அவர்களை பயத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

இந்த நேரத்தில் தான் அவர்களோடு கடவுள் ஏசாயாவின் மூலம் பேசுகிற வார்த்தை பயப்படாதிருங்கள். நான் உன்னுடனே இருக்கிறேன் என்கிறார். உன்னை பலப்படுத்துவேன் உனக்கு உதவி செய்வேன், என் நீதியின் வலது கரத்தால் தங்குவேன் என்கிறார்.

துவண்டுப்போன அவர்கள் வாழ்வை இந்த வார்த்தைகளை கொண்டு உற்சாகப்படுத்துகிறார். அவர்கள் மனதை திடப்படுத்துகிறார், இவை வெறும் வார்த்தைகளால் ஆண்டவர் தருகிற உற்சாகம் அல்ல செயல்படுத்தியும் காட்டினவர், அவர் சொன்னபடியே தனது நீதியின் வலது கரத்தினால் தாங்கி விடுவித்து இரட்சித்தார்.

நம்முடைய வாழ்விலும் கூட மனரீதியான பாதிப்புகள் நம்மை பல நேரங்களில் செயல்பட விடாமல் தடுக்கிறது, நான் ஒன்றும் இல்லை, என்னால் ஒன்றும் செய்ய முடியாது, எனக்குள் பலம் இல்லை, யாரும் ஆதரவு இல்லை, என்பது போன்ற பயங்களில் ஏதாவது ஒன்று நம்மை கூட செயல்பட விடாமல் தடுக்கிறது ஆனால், நம் அனைவரையும் மீட்க இவ்வுலகில் வந்து நமக்கு துணையாக இருப்பதை தன் ஜீவனைக் கொடுத்து உறுதி செய்த கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். எந்த பயங்களும் இல்லாமல் இந்த நாளை துவங்கி வெற்றியை நோக்கி பயணிக்க  பரிசுத்த ஆவியானவரை கொண்டு கடவுள் நமக்கு துணை செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews