WORD OF GOD

WORD OF GOD

Sunday, February 20, 2011

தீமையை வெல்வோம்

அன்பான உடன் விசுவாசிகளே இந்த பரிசுத்த ஒய்வு நாளின் காலை ஸ்தோத்திரங்கள். இன்றைய நாளுக்குரிய நமது வேத பகுதிகள்.

சங்கீதம் 103 :1 -3 
உபாகமம்.19 :15 -21 
1  கொரிந்தியர்.3 :10 -11 ,16 -23 
மத்தேயு.5 :38 -48      

பிரசங்க வாக்கியம் உபாகமம்.19 :15 -21 

கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த உடன் விசுவாசிகளே பிள்ளைகள் முதன் முதலாக பள்ளிக்கூடத்திற்கு போகும்போது வீட்டிற்குள் ஒரு பெரிய போராட்டமே வெடிக்கும், காரணம் அதுவரை பெற்றோரை விட்டு அதிக நேரம் பிரிந்திராத பிள்ளை திடீரென பெற்றோரை பிரிந்திருப்பதையும், புதிய இடத்தையும் சூழ்நிலையையும் விரும்பாததாலும் பள்ளிக்கு போக பிள்ளைகள் விரும்புவதில்லை.

அந்த நேரத்தில் பெற்றோர்கள் வேறு வழியின்றி பிள்ளைகளை தண்டிக்க வேண்டியுள்ளது, அதாவது பள்ளிக்கூடத்திற்கு இப்ப போலனா உன்ன அடிப்பேன் என்று கையில் குச்சியை வைத்து மிரட்டுவோம், அதற்கும் பயப்படவில்லை என்றால்  இரண்டு அடி வலிக்கும்படி அடிப்போம்,

அடிப்பதன் நோக்கம் என்ன அவனுக்கு வலிக்க வேண்டும் என்பதா? இல்லை, பயப்படவேண்டும் என்பதா? இல்லை, அவன் பள்ளிக்கூடம் போகவேண்டும் என்பதற்காக, பள்ளிக்கூடம் போனால் யாருக்கு நன்மை பெற்றோருக்கா? இல்லை பிள்ளை நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, எத்தனை பிள்ளைகள் படித்துவிட்டு பெற்றோரை பாதுகாக்கிறார்கள் ? ஆனால் அவர்களை படிக்க வைத்தது  பெற்றோர்கள்.  

பிள்ளையை அடிக்கும்போது பிள்ளைக்கு வலிக்கிறதோ இல்லையோ எந்த பெற்றோரும் பிள்ளையை அடித்துவிட்டு அது  அழுதுக்கொண்டிருப்பதை பார்த்து நிம்மதியாக இருப்பதில்லை, பிள்ளையின் வலியை விட அடித்த பெற்றோரின் உள்ளத்தில் ஏற்படுகிற வலி அதிகம்.

இன்றைய நம்முடைய தியான பகுதியும் தண்டனைகளை பற்றி பேசுகிறது, கடவுளுடைய ஜனத்தின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை மோசேயின் வழியாக கடவுள் வெளிப்படுத்துகிறார், அதில் குற்றங்கள் நடந்தால் நியாயமாக விசாரணைகள் நடைபெற வேண்டும் என்றும், இரண்டு மூன்று சாட்சிகளை கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார், மேலும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று தண்டிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இவ்வளவு கடுமையான தண்டனையை கடவுளே தன ஜனத்தின் மத்தியில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார், அதற்கு கடவுள் சொல்லுகிற காரணம் உங்கள் நடுவிலிருந்து தீமையை அகற்ற இதை செய்யுங்கள் என்று கூறுகிறார்.

தீமை செய்தால் கடவுளுக்கு என்ன கஷ்டம் உண்மைதான் கடவுளுக்கு எந்த கஷ்டமும் இல்லை, தீமை செய்தால் தீமை செய்தவனுக்குதான் கஷ்டம், அவன் நிம்மதியாய் இருக்க முடியுமா? தீமையினால் ஒருவன் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா? குற்றவாளி என்கிற அவப்பெயருடன் வாழவேண்டி வருமே? உறவுகளும், ஊரும் கேவலமாக பேசாதா? அப்படியானால் தீமை செய்வதினால் தீமை செய்தவருக்கு எந்த நன்மையையும் இல்லாத போது கடவுள் எப்படி அதை அனுமதிப்பார், அதுமாத்திரமல்ல தீமையினால் அடுத்தவருக்கும் தீமைதானே விளைகிறது? மனு குலத்தை காக்கும் கடவுள் தீமைகளை எப்படி அனுமதிப்பார்?  

மத்தேயு சுவிசேஷம் 5 :38 -48  வரை உள்ள வசனங்களில் இயேசு கிறிஸ்து தண்டனைகளை பற்றி மிக தெளிவான விளக்கம் தருகிறார், அது யாதெனில்? ஒருவன் தீமை செய்தால் அவனை தண்டிக்காதீர் என்று ஒரு தகப்பனின் உள்ளத்தோடு கூறுகிறார்.  மாறாக அவனுக்கு நன்மை செய்யுங்கள்  என்கிறார், காரணம் தீமைக்கு தீமை என்றுகூட தீமை வளர்ந்துவிடக்கூடாது என்று ஆண்டவர் கூறுகிறார் காரணம் தீமையினால் நன்மை இல்லை மாறாக நன்மை செய்தால், அந்த இடம், அந்த வாழ்க்கை இனிமையாகிவிடுகிறது . அதுதானே நிறைவான வாழ்க்கை என்கிறார்.

பவுல், 1  கொரிந்தியர் 3 : 16  முதல் உள்ள வசனங்களில் நாம் கடவுளின் ஆலயம் என்றும் நமக்கு நாமே தீமை செய்ய உரிமை இல்லை என்கிறார், காரணம் ஒன்றுதான், நாம் நன்றாக இருக்கவும் இறைவனின் நாமம் மகிமைப்படவுமே.

கடவுள் தீமையை வெறுக்க காரணம் நாம் நன்றாக இருக்க வேண்டும்  என்பதே, அதை நிரூபிக்கவே தீமை செய்த நம்மை காக்க தன் ஜீவனை கொடுத்தார்.

எனவே நமக்கு பிரயோஜனம் இல்லாத தீமையை வெல்வோம். நன்மையினால் வாழ்வைக்கட்டி எழுப்புவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு,. கில்பர்ட் ஆசீர்வாதம்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews