WORD OF GOD

WORD OF GOD

Tuesday, February 8, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளே காலை வணக்கங்கள்.
இன்றைய தியான வசனம். யோவான்.14 :1

 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகில் தனக்கு துணையாக இருக்க 12  சீடர்களை தெரிந்துக் கொண்டார், அவர்களில் ஒருவரும் பெரிய செல்வந்தர்களோ, படித்த மேதைகளோ, உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்களோ இல்லை. மீனவர்களும் ஆயக்காரர்களுமாக இருந்தார்கள். ஆனால் இவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்பி வந்ததால் சமூகத்தில் பிரபலமானவர்களாகவும், கடவுளுடைய வல்லமையான ஊழியர்களாகவும் மாறினார்கள். அதே நேரத்தில் , இயேசு
கிறிஸ்துவோடு சேர்ந்ததால் அவரை எதிரியாக நினைத்த சதுசேயர் பரிசேயர்கள் போன்றவர்களுக்கு இவர்களும் எதிரியாக மாறினார்கள்.

ஆனாலும் ஆண்டவர் இருக்கிறார் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையில் தைரியமாய் இயேசுவின் பக்கம் நின்றார்கள். அவர் தேவ குமாரனாகிய கிறிஸ்து அல்லவா தங்களோடு அவர் இருக்கும் வரை யார் என்ன செய்ய முடியும் என்ற துணிச்சல் அவர்களுக்கு இருந்தது.

ஆனால் ஆண்டவர் திடீரென்று அவர்கள் நம்பிக்கையில் மிகப்பெரிய பாறாங்கல்லை தூக்கி போடுகிறார். 13 வது அதிகாரத்தில், உங்களில் ஒருவன் என்னை காட்டி கொடுப்பான் என்றும், நான் இந்த உலகை விட்டு போக போக போகிறேன்  என்றும் கூறுகிறார், இதை கேட்ட சீடர்கள் நடுங்கி போனார்கள் காரணம் இவரை நம்பி தங்கள் சொந்த வேலையை விட்டு விட்டார்கள், உறவுகளை விட்டு விட்டார்கள், அதைவிட வேதனை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கிறவர்களுக்கு எதிரியாகி விட்டார்கள்.

இதை எல்லாம் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்கிற ஒரே நம்பிக்கையில் செய்து விட்டார்கள், ஆனால் திடீரென பாடுபட்டு மரிக்க போகிறேன் , உங்களை விட்டு பிரிந்து போகப்போகிறேன் என்றெல்லாம், கூறுவது அவர்கள் இதயத்தை அசைக்க கூடிய செய்தியாக இருந்தது.

நமது உள்ளத்தை ஆராய்ந்து அறிகிற தேவன், சீடர்களின் உள்ளத்தில் இருந்த பயத்தையும் அறிந்துக்கொண்டார், எனவேதான் 14 ம் அதிகாரம் முதல் வசனத்தில் ஆண்டவர் சொல்லுகிற முதல் வாக்கியம் உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக என்பதே. மாத்திரமல்ல என்னில விசுவாசமாய் இருங்கள் என்கிறார்.

நம்முடைய வாழ்வில் கூட நாம் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும் போது, நம்மை அச்சுறுத்துகிற வகையில் சம்பவங்கள் நடக்கும்போது நம் இருதயம் கலங்கினவர்களாய் தவிக்கிறோம். இனி எப்படி இந்த  பிரச்சனையில் இருந்து தப்பிக்க போகிறோம் என்று கலங்கி தவிக்கிறோம்.

ஆனால் இயேசு கிறிஸ்து சொல்லுகிற  பதில் உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, என்னை நம்புங்கள் என்பதே, காரணம் நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர், நம்மை காக்க தன்னை இழந்தவர், நம்மை நிர்கதியாக விட்டுவிட மாட்டார், யார் கண்களுக்கு  முன்பாக பயந்து வாழ்ந்தோமோ அதே கண்களுக்கு முன்பாக நம்மை நிலை நிறுத்தி காட்டுவார் அதை தானே சீடர்கள் வாழ்வில் செய்தார்.

நம்மையும் அந்த உயர்வில் நிலை நிறுத்துவார்.கலக்கங்களை விட்டு விசுவாசத்தை காத்துக்கொண்டு தேவனுடைய மகிமையை காண்போம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews